Monday, November 29, 2010


சென்னையின் துயரம் - சேரிகள்



சென்னையின் துயரமாக விளங்குவது கூவம் ஆறும், அந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளும் தான். சென்னை மாநகரத்தின் ஒட்டு மொத்த குப்பையும், தொழிற்சாலைகளின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலந்து கடலில் சேருகின்றது. சிலர் சாக்கடையில் வாழும் புழுவைப் போல் இந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் ஒன்றான சைதாபேட்டை, கூவம் ஆற்றின் கரையோரப்பகுதியில் அமைந்திருக்கும் திடீர் குப்பம், டோபிகான ஆகிய பகுதிகளுக்கு கடந்த வாரம் சென்றேன். மழை பெய்து இருந்ததால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவு நீர் தேங்கி நின்றது. அதையும் தாண்டி துர்நாற்றம் வேறு. ஒரு வழியாக சேரிக்குள் நுழைதேன். நெடுக்கமாக ஒரே ஒரு பாதையும், பாதைகள் முழுவதும் கழிவு நீரும், பாதையின் இருபுறங்களிலும் குடிசை வீடுகள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தது.
ஒற்றையடி பாதை வழியாகக் கடைசியில் அமைத்திருந்த வீடை அடைந்தேன். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டினுள் சாக்கடை நீரும், பிளாஸ்டிக் பைகள், இதனுடன் கருப்பு நிற சகதியாக காணப்பட்டது.
வீட்டின் கூரைப்பகுதியும் வெள்ளத்தால் சேதம் அடைந்திருந்தது. அப்போது அங்கு வசிக்கும் வேலம்மாள் என்ற பெண்ணிடம் இந்த இடத்தை பற்றி விசாரித்தபோது . "இவர்களில் சிலர் இங்கு ஆற்றின் துணி துவைபவர்கள்.
இவர்கள் நிரந்தரமாக இங்கே வசித்து வருகிறார்கள். சிலர் அரசால் இடம் பெயர்த்தப்பட்டவர்கள். இதனால் இப்பகுதிக்கு திடீர் நகரம் என்ற பெயரும் உள்ளது. இப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் கழிவு நீர், மற்றும் வெள்ளம் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் ஒன்றை அரசு கட்டிகொடுத்துள்ளது. அந்த பகுதியில் முன்பகுதி ரயில்வே இடம் என்பதால், அந்த இடத்தில் சுவர் கட்டாமல் விடப்பட்டுள்ளது. தடுப்பு சுவரையும் மீறி கழிவு நீர் உட்புக இப்பகுதி தான் காரணமாக அமைகிறது" என்று அவர் கூறினார். இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார். தினமும் நுறு ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆண்கள் பலர் இங்கு மது அருந்தி தன்னுடைய வருமானத்தை அழிகின்றனர். பெரும்பாலான வீடுகளில் அரசு தொலைக்காட்சி பெட்டி இருந்தது.


இவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதியில் சிக்கல் உள்ளது. கழிப்பறைகள் எந்த வீட்டிலும் இல்லை. எல்லாவற்றையும் விட சாக்கடையான கூவம் எந்த நேரத்திலும் உட்புகும், நோய் பரவும் அபாயம் வேறு. இப்படி பல பிரச்சனை இருந்தாலும் இதை பற்றி இம்மக்களுக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லை. அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திடம் மக்கள் எந்த கேள்வியும் கேட்டு விடாமல் இருக்க, மக்களின் மூளை நன்கு மலுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தொலைகாட்சி திட்டம் சென்று சேர்ந்த அளவுக்கு, மற்ற அடிப்படை வசதிகள் அப்பகுதிகளில் இல்லாமல் இருப்பது உணர்த்துகிறது.

குழந்தைகள் கல்வி கற்க செல்கின்றனர் என்பது மட்டுமே மகிழ்ச்சியான ஒன்று. இக்குழந்தைகளின் கல்வியாவது இந்நிலையை மற்றுமா? சென்னை சிங்கார சென்னையாக மாறுமா ?