Sunday, November 28, 2010

செத்த காலேஜ்

கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்து வந்தாலும் முதல் முறையாக எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு பல்கலைக் கழக நண்பர்களுடன் இவ்வருடம் நவம்பர் முதல் வாரத்தில் நுழைந்தேன். (கன்னிமாரா நூலகத்திற்கு சென்றிருக்கிறேன்)

அருங்காடசியகத்தின் முகப்பு கட்டிடம் Indo-Saracenic கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த கட்டிடம் ஹென்றி இர்வினால் 1896ல் கட்டப்பட்டது. திருடா திருடா என்ற திரைப்படத்தின் பாடல் இந்தக் கட்டிடத்தில் தான் படமாக்கப்பட்டது.


தலா ஒருவருக்கு ரூ.15 கட்டணமாக வசூலித்துக் கொண்டு உள்ளே விடுகிறார்கள். இதில் புகைப்படக் கருவியை பயன்படுத்த விரும்பினால் ரூ. 200 கட்டணமும் செலுத்த வேண்டும். இதில் வெளிநாட்டிர் என்றால் ரூ. 150 கட்டணம். இதனை லீஜா (சீனா) வர்சினி (இலங்கை) இருவரிடம் கூறியதும், ஓ வென்று அழாதது தான் குறை. நாங்கள் அருங்காட்சிய அலுவலகத்திற்கு சென்று சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பத்து பேர்களுக்கும் இலவச நுழைவுச் சீட்டை பயன்படுத்தி முதலில் மையக் கட்டிடதத்தினுள் நுழைந்தோம். இப்போது தான் லீஜா மற்றும் வர்சினி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது.

மையக் கட்டிடத்தினுள் கல்வெட்டுகள், சிந்துவெளி நாகரிகம், சிற்பங்கள் ஆகியன காட்சிப்படுத்துப் படுத்தப்பட்டுள்ளது. நண்பர் சலிம் ஒரு கைடு (வழிகாட்டி) போன்று ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்துரைக் கொண்டே வந்தார். சலிமிற்கு கைவசம் ஒரு தொழில் இருக்கின்றது.

குறிப்பாக அந்த மையக் கட்டிடத்தினுள் என்னைக் கவர்ந்தது சிந்துவெளி நாகரிகம் வைக்கப் பட்டிருந்த பகுதி தான் அதில் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் என்னை ஆச்சர்யத்தினுள் மூழ்கடித்தது. அந்தப் பாண்டங்கள் எல்லாம் அளவில் மிகப்பெரியதாக இருந்தது. தற்போது எல்லாம் தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் தோன்டி எடுக்கப்படுமே அந்தளவிற்கு அவைகள் இருந்தன. அநேகமாக அவற்றில் சமையல் செய்திருப்பார்களா--? அல்லது தானியங்களை சேகரித்து வைத்திருப்பார்களா என்பதை அறிய நான் நான்காயிரம¢ ஆண்டுகள் பின்நோக்கி பயணிக்க விரும்புகிறேன். கால இயந்திரத்திற்கு எங்கே செல்வது---? வாடகைக்கு யாரும் தந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

மேலும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரிப் படிமம் ஆண் மற்றும் பெண்ணின் அவயவங்களில் நளினங்களைச் சிறப்பாகக் காட்டுகிறது. இந்தச் சிலையின் சிறப்பே ஒரு பக்கம் ஆண் தோற்றத்தையும், மறு புரம் பெண் தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. அர்த்தநாரிஸ்வரர் என்றால் புரியும் என்று நினைகின்றேன்.

அடுத்து நாங்கள் பயணித்தது வெண்கலக் காட்சிக் கூடம். இதில் வைணவ, சைவ, பௌத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங்கங்கள், நாணயங்கள், பதக்கங்கள் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது.

பழங்கால நாணயங்கள், பட்டயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு முந்தைய வெள்ளையர்களால் நாணயங்கள்-, சுதந்திரத்திற்கு பிந்தைய நாணயங்கள். முகலாயர் காலத்து நாணயங்களில் ஒருபுறம் இந்துக் கடவுள்களும் மற்றொரு புறம் இஸ்லாமிய அடையாளங்களும் பொறிக்கப்பட்டு, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

 ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஹைதர் அலி ஆட்சியில் வெளியிடப்பட்ட நாணயங்களின் ஒரு பக்கம் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க, மறுபக்கம் ஹைதர் அலியின் பெயரின் முதல் எழுத்து பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது.

அருங்காட்சியகத்தைச் சுற்றிலும் க்ளோஸ் சர்க்யூட் கேமராக்கள் மட்டுமே 77 லட்சம் செலவில் பொருத்தி இருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் இங்கிருந்த 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலையை கொய்து விட்டு சமூக விரோதிகள் சென்றதினால் இந்த ஏற்ப்பாடு. கண் கெட்ட பின்னர்......

சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலை இந்த அருங்காட்சியகத்தில்தான் சில நாட்கள் இருந்தது. பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு இடப் பெயர்ச்சியும் செய்யப்பட்டது. (அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)

அருங்காட்சி கட்டிடங்களுக்கு வெளியில் பயன்படுத்தாத பழைய அரிய பொருட்களுக்கு பல ஓரமாக கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றையும் பாதுகாத்தல் வேண்டும்.

சென்னை மக்களால் இந்த அருங்காட்சியம் செத்த காலேஜ் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்த பெயர் காரணம் எவ்வாறு ஏற்பட்டது என்று என் அறிவுக்கு எட்டவில்லை. தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.

ஆக்கம் மற்றும் படம்: எஸ். முகம்மது ராஃபி