Thursday, November 25, 2010

வரலாற்றின் மிச்சங்கள்:


எழும்பூர் அருங்காட்சியகம் :                        
சென்னை, எழும்பூர்-ல் அமைந்திருக்கும் , அரசு அருங்காட்சியகம் இந்தியாவிலயே பழமையும் மிகபெரியதுமான அருங்கட்சியமாகும்.1851-ல் நிறுவப்பட்டு சீரான வளர்ச்சியும் விரிவாக்கவும் அடைந்து வருகிறது.1951 -ஆம் ஆண்டு அதன் நூற்றாண்டு பொன்விழா கொண்டாட்டத்தினை அப்போதைய பிரதமர் திரு.பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த அருங்காட்சியகம்   தொல்லியல், கலை, மானுடவியல், குழந்தை சார் விடயங்கள், நாணயவியல், விலங்கியல்,மற்றும் புவியியல் என பல துறைகளை  ஒருங்கே அமையபெற்றதாகவும் பன்-நோக்கத்தை  உடையதாகவும் திகழ்கிறது .உலகிலயே முதன்முதலாக இனவியல் மற்றும் கற்கால  காலகட்டத்தின் தொல்லியல் பொருட்களை  அருங்காட்சிய பொருளாக ஆக்கிய பெருமை இந்த அருங்க்காட்சியதுக்கு  உண்டு. கற்கால காலத்தின் தொன்மங்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
                       மேலும்  பல்வேறு பகுதிகளாக பிரிக்கபட்டு, அதனதன் துறைதேர்ந்த வல்லுநர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறமை குறிபிடத்தக்க அம்சமாகும். இங்குள்ள அருங்காட்சிய பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு இராசாயன கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் நிர்வாகத்திற்காக கல்வி,பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு என மூன்று பகுதிகளாக இயங்கி வருகிறது.

அமைப்பும் காட்சியும்:
                       1 ) மைய கட்டிடம்(Main Building )
                       2 ) முகப்பு கட்டிடம் (Front Buiding)
                       3 ) உலோகச்சிலை கலைக்கூடம் (Bronze Gallery )
                       4 ) குழந்தைகள் அருங்காட்சியம் ( Chidren's Museum )
                       5 ) தேசிய கலைக்கூடம் ( National Art Gallery )
                       6 ) வளர்கலை கலைக்கூடம் (Contemporary Art gallery )
என ஆறு பகுதிகளாக உள்ளது.

                      முதலில், மையகட்டிடம் சென்றோமேயானால் அங்கு கற்சிற்பங்கள்,கல்வெட்டுகள், சிந்து சமவெளியை சார்ந்த பொருட்கள், நடுகல், இந்து மத  சிற்பங்கள், அமராவதி சிற்பங்கள், ஜெயின்  சிற்பங்கள்,பழங்கால நாணயங்கள், படிமங்கள், பாறைகள், தாதுக்கள் என பலவாறு உள்ளது. இதன் மூலமாக மக்களுடைய சமூக வாழ்வியல் முறைகள், அவர்களுடைய கலாச்சாரம், கலாச்சார பரிமாணம் என பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

கற்சிற்பங்கள்:     
                      அமராவதி சிற்பக்கலையை  சார்ந்த (கி.மு -200 லிருந்து - கி.பி 300 வரை இடைப்பட்ட காலம்) புத்தர் சிலைகள் கலைகளின் வளர்ச்சியை பறைசாற்றுவதோடு மட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில்(ஏறக்குறைய 5 நூற்றாண்டுகள்)  இருந்த மக்களின் வாழ்க்கை முறையையும் தெரிவிப்பதாக உள்ளது.
    

மேலும் இந்த பகுதியில் பல்வேறு காலச்சிற்பங்கள் - சோழர்,பல்லவர்,விஜயநகர, நாகர் மற்றும்  நவீன கால சிற்பங்கள் என ஒன்றாக உள்ளதால், அவற்றை ஒப்பிட்டு  பார்த்து அவற்றின் இடையே உள்ள  மாற்றங்களை  காணும்போது நுண்கலைகளின் பரிணாம வளர்ச்சி மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.மேலும் சிற்ப ஆயுதங்கள், மண் சொக்கட்டான் காய்கள்( pottery gamesmen ), விளையாட்டு கருவிகள் என்பன போன்றவும் காட்சி பொருளாக உள்ளது. 
                          உதராணமாக பல்லவர் காலத்து சிற்பங்களில் உள்ள   இயல்புத்தன்மை  ,    சோழர் காலத்து சிற்பங்களில் உள்ளதை விட குறைவாக இருக்கும்.

1 ) வட்டமான முகம், திருமாலின் ஆயுதங்களில் தீப்பிழம்புகள், உடல் அமைப்புகளில் அழகான பாகங்கள் என சற்று இயல்பு தன்மை மிகையாக இருப்பதாய் காணலாம்.
2 ) மேலும் விஜய நகரத்து காலத்து சிற்பமோ, தமிழ் சிற்பத்தை ஒட்டி வளர்க்கபட்டு நாடு முழுவதும் பரப்பட்டது.


எழுத்துருக்கள் ( ManuScripts ):
                      வடநாட்டு குப்தா, சிந்து மொஹன்ஜதரோ, பிராம்மி, கரோஷ்டி, போன்ற   எழுத்துருக்களையும் அதன் பரிணாமத்தையும் தெரிவப்பதாக உள்ளது அங்குள்ள கல்வெட்டுக்கள் .  இது தொடர்பாடலின் மகத்தானதொரு வளர்ச்சியையும் தன்மையினையும் அறிவிப்பதாக உள்ளது. 

                      பின்பு அங்கிருந்து அதன் பின்புறமாக அமைந்துள்ள Bronze Gallery சென்றால் ,இந்த கட்டிடம் மூன்று தளங்கை உடையதாகவும், குளிர்சாதன வசதி பொருத்தபட்டும், நன்றாக காட்சிபடுத்தப்பட்டும்  உள்ளது.
1 ) உலகின் அளப்பரிய உலோக சிலைகளின் கூடாரமாக இந்த அருங்காட்சியகம் விளங்குவதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
2 ) இதிலே பெரும்பகுதி தென்னிந்தியாவை சார்ந்த பொருட்களாகவே உள்ளன.
3 ) இதிலே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக திருவளங்காட்டை சேர்ந்த நடராசர் சிலை ( Dance of Siva (Nataraja )) ஒன்று  உள்ளது.

நாணயங்கள்:
                      அதிகம் தென்னிந்திய மற்றும் முகலாயர்களின் நாணயங்களை கொண்டுள்ளதாக, உலக அளவில் தனி கவனத்தை பெறுகிறது.     சென்னை அருங்காட்சியகம். இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திப்புசுல்தான் காலக்கட்ட நாணயங்கள், ராஜ ராஜர், குலோத்துங்க சோழர்கள் கால நாணயங்கள் என அரிய பொக்கிஷங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது.
மேலும் பதக்கங்கள், வரலாற்று ஆவணங்கள், முத்திரைகள் என்பன போன்றவைகளும் உள்ளன. சில பாதுக்காப்பு காரணங்களுக்காக, முக்கியம் வாய்ந்த நாணயங்களின் மாதிரி வார்ப்புகள்( Specimens ) மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன .

சிறுவர் அருங்காட்சியகம்:

                      மக்களின் உடை கலாச்சாரத்தை அறியும் விதமாக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக பகுதிகளின் உடைகளை அணிந்த பொம்மைகள் உள்ளது. மேலும் கட்டி கலைகளை எளிதாக உணர்த்தும் வகையில் கண்ணாடி பேழைக்குள் பல்வேறு சமுதாய நாகரிங்களின்(எகிப்திய, சிந்து சமவெளி, மாயன், ...) மாதிரி கட்டிட கலைகள் உள்ளது. மேலும் இதற்கு அடுத்த தளத்தில் பல்வேறு காலகட்டத்தை சார்ந்த தொழில்நுட்பங்கள் ( போக்குவரத்து சாதனங்கள், தொடர்பாடல் சாதனங்கள்.......,) உள்ளன .
                                      
வளர்கலை காட்சிக்கூடம் :

                      
  இது புராதன மற்றும் நவீன ஓவியங்களின் தொகுப்புகளை நல்ல அளவில் கொண்டுள்ளது.
                         மரபு ஓவியங்கள்: தஞ்சாவூர் ஓவியம் ,முகலயார்கள் ஓவியம் , ராஜபுத்திரர் ஓவியம்,தென்னிந்திய புராதன ஓவியங்கள், காங்கரா, டெக்கானி மற்றும்
                   
                   நவீன ஓவியங்கள் :( Oil painting, Tempera Painting, Water Colour Painting, Graphics, Acrilyc and Metal Sculpture)

1 )  தமிழ்  இலக்கியத்தை காட்சிபடுத்தும் விதமாக தஞ்சாவூர் ஓவியம் உள்ளது.
2 ) 16 ஆம்  மற்றும் 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த ராஜபுத்திரர் ஓவியங்கள் இசையின் தாளநய குறியீட்டை மையபடுத்தி அமைந்துள்ளது .
3 ) முகலாயர்களின் ஓவியங்களில் குறிப்படதக்கவையாக  பாபரின் நீதிமன்ற காட்சி, ஜகான்கரின் புகைப்படை ஓவியக்காட்சி , பறைவகளின் ஓவியங்கள் உள்ளன.
4 ) காங்கரா ஓவியம் கிருஷ்ணரை மையபடுத்தி தீட்டப்பட்டுள்ளது.

                          இவ்வாறாக நாம் இந்த அருங்காட்சியத்தின் மூலமாக குறைந்த நேரத்தில் நிறைந்த ஞானத்தை அடைய முடியும் என்றால் அது மிகையில்லை.அவ்வளவு அளப்பரிய விடயங்களை (   தொல்லியல், கலை, மானுடவியல், குழந்தை சார் விடயங்கள், நாணயவியல், விலங்கியல்,மற்றும் புவியியல் ) பொதிந்துள்ளதாக ஒருங்கே அமையபெற்றுள்ளது.
நமக்கு தென்படும் ஒரே குறை வழக்கம் போலவே பராமரிப்பு மற்றும் அதன் மதிப்பு தெரியாமல் இருக்கும் தன்மைகள் ஆகும். இதன் நுழைவு கட்டணம் மிகவும் குறைவு. நிச்சயம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளித்து பயனடைய கூடிய இடம் என்பதில் சந்தேகம் இல்லை.


                               ---- சலீம்