தரையிலும்,தண்ணீரிலும் தவளைகள் மட்டுமா வாழும்?! இல்லை நாங்களும் வாழ்வோம் என்கிறார்கள் சென்னைவாசிகள்.
சாலைகள் எங்கே எனத்தேடும் வாகன ஓட்டிகள், விடுமுறையை எதிர்பார்த்து மகிழ்ச்சியடையும் பள்ளி சிறுவர்கள் , மழையை திட்டும் வியாபாரிகள், கழுவிவிடப்பட்ட கட்டிடங்கள்,பிரகாசிக்கும் காக்கைகள் என பலகாட்சிகளின் பின்னலாக சிரிக்கிறது சென்னை மாநகரம்.
வாகனங்களின் இரைச்சலாலும்,புகையாலும் எப்பொழுதுமே கோபமாய் இருக்கும் மாநகரத்தின் கோபம் மழையின் காரணமாக சற்று தணிந்திருக்கிறது.
"இந்த ஊர்ல மட்டும்,மழை வந்தாலும் தொல்லை,வெயில் வந்தாலும் தொல்லை" என கூறுபவர்களே இங்கு அதிகம்.
சரியான வடிகால் வசதி இல்லாமை,ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் சாலையிலும்,வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதாக கூறும் பொதுமக்கள்,எதுவாக இருந்தாலும் சமாளித்துக்கொள்ள பழகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பெருமளவு தொழிற்சாலைகள்,உணவகங்கள்,கேளிக்கை விடுதிகள் என நிறைந்து கட்டிடக்காடாக இருப்பதால்,எப்பொழுதுமே வெயில்,மழை என எது வந்தாலும் மல்லுக்கு நிற்கிறது இந்த மாநகரம்.
சில சமயம் அதிகமாக பெய்து ஓட்டை சாலை, நிரம்பி வழியும் சாக்கடை , சுகாதார கேடு என ஆட்சியாளர்களின் சாயத்தை வெளுக்க வைத்து விடுகிறது மழை .
திரையில் வரும் கதாநாயகர்கள் மட்டுமே மழையை சந்தோசமாக அனுபவிக்கிறார்கள் எனவும், நிஜத்தில் மழையால் மகிழ்ச்சியடைந்தாலும் பெருமளவு அதனால் பாதிப்பே அதிகம் அடைவாதாக கவலைப்படுகின்றனர் மற்றுமொரு சாரர்.

பணக்காரனுக்கு வெயிலு அடிச்சா ஏ.சி. மழை பேஞ்சா காரு நாங்கதான் ஓட்டைவீடு, தினக்கூலி, கூட்ட நெரிசல் என அல்லோல்படுவதாகவும் அலுத்துக்கொன்டனர் விளிம்பு நிலை மக்கள்.
எது எதுவாக இருப்பினும்,இவையெல்லாம் நமக்கு நாமே வைத்துக்கொண்டவை,இதில் மழையையோ வெயிலையோ குறை சொல்வது அறிவீணமாகும் என் தனது அனுபவத்தை பகன்றார் புத்தகக் கடை ஊழியர் ஒருவர்.
மழை குறித்து மரங்களிடமோ,பறவைகளிடமோ கேட்க முடியாவிட்டாலும்,அவை இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியாகவே வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. அது ஏதோ ஒன்றை உணர்த்துவதாக அமைந்திருந்தது.