Sunday, November 14, 2010

பத்திரிக்கைகளுக்கு கலாமின் அறிவுரை

இடமிருந்து வலம்: தினமணி ஆசிரியர் திரு. வைத்திய லிங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா.
சென்னை எம்.ஓ.பி வைஸ்னவா மகளிர் கல்லூரியில் கடந்த நவம்பர் 10 அன்று தினமணி நாளேட்டின் ஆசிரியர் வைத்தியநாதன் எழுதிய ‘உண்மை தெரிந்து சொல்வேன்’ என்ற நூலை வெளியிட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெருந்திரளனான மாணவர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரை.



“பத்திரிக்கைகள் சமூக அக்கறையோடு விளங்க வேண்டும். பத்திரிக்கைகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாவார்கள். பத்திரிக்கைகள் சட்டபேரவை, நகர்மன்ற, ஊராட்சி மன்ற, கிராமப் பஞ்சாயத்து ஆகியனவற்றுக்கு உதவ வேண்டும். வளர்ச்சியடைந்த மாவட்டங்கள் எவை--? வளர்ச்சியடைய வேண்டிய மாவட்டங்ள் எவை? என்பதைப் பத்திரிக்கைகள் தரம் பிரித்துப் பட்டியல் இட வேண்டும்.

குமரி மாவட்டம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து இந்தச் சாதனையை புரிந்துள்ளனர். தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவீனமயம், நீர் நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மைத்துறை ‘எம் வார்ம்’ என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் நிலைகளை தூர்வாரி தண்ணீரை சேமித்துள்ளது. இதன் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம வாசிகள் பயனடைந்துள்ளனர். இது போன்ற சிறந்த முயற்ச்சிகளை பத்திரிக்கை முன்னுரிமை அளித்து பிரசுரம் செய்து மக்களிடையும், அரசு அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை பத்திரிக்கைகள் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். முக்கியமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பத்திரிக்கையும் குறைந்தது 50 சட்டப்பேரவைத் தொகுதிகளை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்ததந்த தொகுதிகளை எவ்வாறு வளப்படுத்துவது, மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன-? எவ்விதமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படவேண்டும். அங்கு என்ன விதமான மனிதவளம், நீர்வளம், நிலவளம், கனிம வளம் உள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம். மக்களின் சக்திகளை எவ்வாறு பயன்படுத்தலாம் எனப்தையெல்லாம் கண்டறிந்து அந்ததந்த தொகுதி மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ‘தொகுதி மேம்பாட்டு திட்டம்’ ஒன்றை வரையறை செய்ய வேண்டும். அந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் மூலம் செயல்படுத்தி, அதை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அவற்றை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியும் 100 சதவீகித கல்வி அறிவு பெற, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் அவற்றை பசுமை நகரமாக மாற்றுவதற்கு மாணவர்களின் மூலம் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற பத்திரிக்கைகள் உதவ வேண்டும்.

பத்திரிக்கைகள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டால் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும்----, ஊராட்சிமன்றத் தலைவரும், நகர்மன்றத் தலைவரும், கிராம ஊராட்சித் தலைவரும் நகரின் வளர்ச்சியை மக்கள் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வோடு பணிபுரிவதற்கு வழிகோலும். விழிப்புணர்ச்சி அடைந்த சமுதாயத்தையும், அறிவார்ந்த தேசத்தையும் உருவாக்க இவ்வாறு பத்திரிக்கைகள் உருவாக்க வேண்டும் என்று கலாம் உரையாற்றினார்.

ஆக்கம் மற்றும் படம்: ராமேஸ்வரம் ராஃபி