![]() |
பேரா.ரவீந்திரன் |
இன்றைய காலகட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஊடகத் துறையும் ஒன்று.
மாணவர்கள் மத்தியிலும் இத்துறையில் ஆர்வம் அதிகரித்து வருவதால், மேலாண்மை படிப்புகளை போன்று, ஊடகத் துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதிலும் தனியார் கல்வி நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்த போட்டி உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த ஆசிரியர்கள், தரமான கல்வி ஆகியவற்றில் இருப்பது மிக அவசியம்.
தொலைநிலைக் கல்வியிலும் ஊடகப் படிப்புகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. ஆனால், மற்ற துறைகளை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையிலேயே ஆராய்ச்சி பட்டம் பெறும்நிலை உள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை தலைவர் ரவீந்தரன் கூறியதாவது: இதழியல் தொடர்பான படிப்புகளை வழங்குவதில் தமிழகத்திலேயே முன்னோடியாக சென்னைப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கடந்த 1947யை தொடர்ந்த ஆண்டுகளில் இத்துறை படிப்புகளுக்கான ஆசிரியர்கள் பெரும்பாலும், அனுபவமிக்க பத்திரிக்கையாளர்களாகவும், பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், துறை சார்ந்த நிபுணர்களாகவும் இருந்தார்கள். காலையில் இவர்கள் வகுப்பெடுத்தனர். மதியம் ஊடக அலுவலகங்களில் நேரடி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களிலும் மாறுதல்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் இருப்பினும் கல்வியின் தரம் தக்கவைக்கப்பட வேண்டும்.
சினிமா, டிவி போன்றவற்றால் ஒரு மாயபிம்பத்தை வளர்த்துக்கொள்ளும் இளைய தலைமுறையினர் தான் அதிகளவில் தற்போது ஊடகம் சார்ந்த படிப்புகளில் சேர்கின்றனர். மாணவர்களின் உண்மையான திறன் அறிந்து, அவை சார்ந்த பணிகளுக்கு தயார்படுத்த வேண்டும். இது ஒரு வகுப்பறையில் அளவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் ஊடகம் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கிவருகின்றன. செயல்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறையான பாடத்திட்டத்தில், அனுபவமிக்க ஆசிரியர்கள் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதே சிறந்ததாக அமையும். தொலைநிலைக் கல்வி முறையில் செயல்முறைப் பயிற்சி என்பது மிகக் குறைவாக உள்ளது.
இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் பெருமளவு உள்ளதால், படித்ததும் வேலை கிடைக்கிறது. எனவே, ஆராய்ச்சி படிப்பில் குறைவானவர்களே ஆர்வம் செலுத்துகின்றனர். பொதுவாக இதழியல், தொலைக்காட்சி, விளம்பரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவைதவிர, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழில்நுட்ப எழுத்தாளர்களுக்கும் (டெக்னிக்கல் ரைட்டர்) அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை படிப்புகளில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேராசிரியர் ரவீந்திரன் தெரிவித்தார்.
“அதிக கல்வி நிறுவனங்கள் ஊடகப் படிப்புகளை வழங்குவதில் தவறில்லை. ஆனால் தரமான கல்வி, தரமான வேலைவாய்ப்பு, தரமான சம்பளம் ஆகியவற்றை அளிக்கப்பதில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்” என்று சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் நந்தகோபால் குறிப்பிட்டார்.