நம்மில் பலருக்கு நாய், முயல், பூனை, புறா பறவை என வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலர் புலிக்குட்டிகளையும், யானைக் குட்டிகளையும், பாம்புகளையும் செல்லமாக வளர்த்து வருவதை கேள்விப் பட்டிருக்ருப்போம். நான் கடற்கரை தோட்டத்தில் வருடக் கணக்கில் ஒரு ஆமையை வளர்த்து வந்தேன். எஸ். முகம்மது ரஃபி அந்தக் கதையை பிறகு சொல்லுறேன். இப்போது மேற்கொண்டு படியுங்கள்.
சிலர் தங்களது ராசிக்காகவும், கௌரவத்திற்காகவும் வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். மனதிற்கு மகிழ்ச்சியையும் பொழுது போக்குக்கு உற்ற துணையாக இருக்கின்ற செல்லப் பிராணிகளுக்கென்றே ஒரு சந்தை கூடுகிறது. அதுவும் நம்ம சென்னையில்....
சென்னை மண்ணடிப் பகுதியில் அமைந்துள்ளது. ‘‘மாஸ்கான் சாவடி’’ இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணியிலிருந்தே சந்தை கூட தொடங்குகிறது. விதவிதமான குருவிகளையும், புறாக்களையும் கொண்டு வருகின்றனர். சிலர் தத்தமது வீடுகளில் வளர்க்கும் நாய், முயல், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள கூண்டுப் பெட்டிகள், வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான உணவு வகைகள் என எல்லாம் ஒரு சேர கிடைப்பதும், விலையும் மலிவாக இருப்பதுமே இங்கு கூட்டம் அதிகமாக வர காரணம் என்கிறார் இப்பகுதிவாசி ஒருவர்.
புறாக்கள் மூலம் தூதுவிட்டது அந்த காலம். இப்போ புறா பந்ததயம் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான புறாக்கள் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான புறாக்கள் வளர்க்கும் இவர், பந்தயத்திற்கு பயன்படுத்துகிற வகையில் புறாக்களை பழக்கி வருகிறார். நான் 12 வயசிலேயிருந்தே புறா வளர்த்து வர்றேன். என்னோட புறா பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கு. முதல்ல, வீட்டுல புறா வளர்க்க சம்மதிக்கல, நான் பிடிவாதமாக இருந்ததால பிறகு வழி இல்லாம ஓ.கே சொல்லிட்டாங்க. இப்போ புறா மட்டுமல்ல, சேவலும் வளர்க்கிறேன். நல்ல ரேட் கிடைத்தால் கையில் இருக்கிறதை வித்துட்டு, வேற அயிட்டங்களா வாங்கி வளர்ப்பேன்.
நீண்ட தெருப்பகுதியில், வழி நெடுகிலும் வளர்ப்பு பிராணிகளை கூண்டிகளில் அடைத்தும், கைகளில் தூக்கி காட்டிய படியும், வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் பெண்கள் என செல்லப் பிராணிகளை விற்பனை செய்பவர்கள் தங்களின் பகுதி நேர தொழிலாகவே இதை பார்க்கின்றனர்.
வார வாரம் சந்தையில் ஆஸ்திரேலியா லவ் பேர்ட்ஸ், ஜப்பான் காடை, மைனா, ஈமுக் கோழி என புதுவரவுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. சென்னை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து வளர்ப்பு பிராணிகளை வாங்கி செல்கின்றனர்.
காலையில் கூடி நண்பகல் 12 மணிக்குள் கலைந்து போகிற இந்த சந்தையில் நடக்கும் நில மணி நேரங்களிலான வியாபாரம் சில லட்சங்களை தொட்டுவிடுகிறது. அங்கிருக்ந்த பெரியவர் கோபால் நம்மிடம் இந்த பகுதியில் சந்தை வந்து அறுபது வருஷத்துக்கு மேலாகுது. முன்னெல்லாம் பல வகையான குருவி, பறவைகள் வரும் அதப்பார்க்கவே நல்லா இருக்கும். நானும் கொஞ்ச காலத்திற்கு முன்னாடி ஆசையா ஒரு கிளி வளர்த்தேன். கி.கி.கின்னு கத்திக்கிட்டு என்னையே சுத்தி சுத்தி வரும். ஒரு நாள் அதுக்கு என்ன நோய் வந்ததுன்னு தெரியல. ரெண்டு நாளா எதுவும் சாப்பிடாமல் செத்துப் போச்சு.... இப்பவும் என்னோட செல்லக்கிளி என் கண்ணுக்குள்ளேயே இருக்கு என பிளாஷ்பேக் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அடுத்து நாம் இந்த சந்தையில் நரிக்குறவரான பிப்ரவரி. ‘சாமி நான், பிப்ரவரி மாசம் பிறந்தேனா... அதனால எனக்கு அந்த பேரை வச்சுட்டாங்க..’ என தன் பெயர் காரணம் கூறியவர், நாங்க மணலி பகுதியில் இருக்கிறோம்ங்க, குடியிருக்க வீடு இல்லீங்க, காட்டுக்கு போயி வேட்டையாடக் கூடாதுன்னு பாரஸ்ட் காரங்க தொந்தரவு பண்றாங்க. முன்பெல்லாம் நெறையா குருவிங்க வரும். ஆனால் இப்போ அது மாதிரி கெடையாது. எங்களையும் பாரஸ்ட்காரங்க காட்டுக்கு விடுறதில்லை.
இப்போ நாங்க கவட்டை, பாசிமணி, பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் நெஞ்சுதான் பொழப்பு நடத்துறோம். எங்களுக்கு தெரிஞ்சது காட்டுத் தொழில்தான். அதையும் விட்டுட்டு வந்து கஷ்டப்படுகிறோம். அரசு எங்களுக்கு மாற்றுத் தொழிலை நெஞ்சு தந்தா பரவாயில்லை என தனது ஆதங்கத்தை கொட்டினார். இந்த தொழில் செய்பவர்களுக்கு போலீஸ் செய்யுற கொடுமை சொல்லி மாளாது என நம்மிடம் வாய் திறந்து பேசினார் நமச்சியவாயம்.
இங்கு பல பகுதியிலேயிருந்து கோழி, குருவிகளை கொண்டு வந்து விற்கிறாங்க. எல்லாம் வீட்டுலயே வளர்த்து எடுத்து வர்றாங்க. ஆனா போலீஸ் இதையெல்லாம் விற்க கூடாதுன்னு அள்ளிட்டு போயிடுது. காசு கொடுத்தா கண்டுக்கமாட்டாங்க. வியாபாரம் இல்லாம காசு கொடுக்க முடியாட்ட கேஸ் போடுறாங்க. இதை தடுத்து நிறுத்த சொல்லுங்க என வேண்டுகோள் வைத்தார்.
சிறு குருவிகளையும், பறவைகளையும் காண்பதே அரிதாகி வரும் இக்காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இப்பிராணிகளை பெருகச் செய்வதும், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்போருக்கு முறையான அனுமதி வழங்குவதும் அரசின் கடமை.
எஸ். முகம்மது ரஃபி