Monday, February 28, 2011

அன்பு செலுத்துவதும் கடவுள்தன்மைதான்!



ஷேக்ஸ்பியரின் படைப்புக்களைச் சர்வதேச ரீதியில் தயாரித்து வரும் முக்கிய நான்கு தயாரிப்பாளர்களுள் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ட்டுமிஸ் பிரிச்சேல், நியூ ஆர்லியன்ஸ் லயோலா பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் நடனத்துறை உதவிப் பேராசிரியர்.  நடனம், நாடகம், குறும்படம், மட்டுமின்றி புகைப்பட தொழில்நுட்பத்தையும் கற்பித்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் உக்ரைன், மலேசியா, நியூயார்க்,  இந்தியா எனப் பல நாடுகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப் படுத்தி வருகின்றார்.

வானொலி நடிகையாகவும் செயற்பட்டு வரும் இவர் அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களையும் திருவான்மியூர் கலாஷேத்திரா நடனத்துறை மாணவர்களையும் இணைத்து நவீன இராமாயணம் என்ற வகையில் "பஞ்சரத்தினா' என்ற குறும்படத்தைத் தயாரித்துள்ளார். திருக்கழுக்குன்றம் அருகே படப்பிடிப்புச் செய்துள்ள இவர், தனது கலைத் திறமையால் மிகவும் பயனுள்ள வகையில் மாணவர்களை நெறிப்படுத்தி உள்ளார். இவரிடம் நாம் கேட்ட சில வினாக்களும்... அவர் சொன்ன பதில்களும்!


"பஞ்சரத்தினா'வின் கதை பற்றிச் சொல்லுங்கள்.

நவரத்தினங்கள் விலைமதிப்பற்றவை. ஐந்து ரத்தினங்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ரத்தினத்துக்குச் சமம். அதனால் ரத்தினங்களுக்கு அவர்களை ஒப்பிட்டுள்ளேன். ரேஸ்மா, தர்மினி, நித்யா, அர்ஜுன் கிருஷ்ணா,மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

குறும்படத்தின் கதை என்ன?

ஐஸ்வர்யா, வினோதா, சங்கீதா ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய நினைக்கின்றனர். ஐஸ்வர்யா அழகு நிலையம் வைத்து, அப்பாவுக்கு உதவுகின்றாள். வினோதா பால்பண்ணையில் வேலை செய்கின்றாள். சங்கீதா, தேங்காய் விற்பனை செய்கின்றாள். அவர்கள் இருக்கும் கிராமத்திற்கு அர்ஜுன், கிருஷ்ணா, ரகு ஆகிய மூன்று இளைஞர்கள் வருகின்றனர்.

இறுதியில் வினோதா-கிருஷ்ணா, ஐஸ்வர்யா-அர்ஜூன், சங்கீதா-ரகு ஆகிய மூன்று ஜோடிகளும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். மூன்று தம்பதிகளும் தங்களின் கல்வித் திட்டம் வெற்றி பெற துர்க்காதேவியின் பாதத்தில் ஆசிர்வாதம் வாங்கி, இந்திய அரசுக்கு அத்திட்டத்தினை ஒப்படைக்கின்றனர்.

நாடகத்தின் இடையேவரும் ஒரு கொலைச்சம்பவம் திடீர் திருப்பமாக இருக்கும்.

குறும்படம், நடனம், நாடகம் இந்த மூன்று படைப்புகளுக்கும் ஒரே கருவைத்தான் பயன்படுத்தியுள்ளீர்களா?

என்னுடைய படைப்பு வித்தியாசமாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  பாத்திரங்கள் வழியாகப் பார்த்தால் அவர்களின் காதல் அன்பான உறவு மூலமான காதலாக வளர்க்கப்பட்டுள்ளது. வருமான நிலை, சாதி என்பனவற்றுக்கும் விஞ்சியது அன்பான உறவுதான் என்பது புரியும்.

எப்படி தங்களின் படைப்புகளுக்காக இந்தியாவைத் தேர்வு செய்தீர்கள்?

நான் நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளேன். திருவான்மியூர் கலாஷேத்திரா ஃபவுண்டேஷனில் வேலை செய்தேன். காட்சியியலில் இரு பரிமாணம், முப்பரிமாணம் என்னும் தலைப்பில் சென்னையில் ஆய்வு செய்கின்றேன். இதனால் சென்னையில் இந்தப் படைப்பைத் தயாரிப்பதற்கு முடிவு செய்தேன்.  

எப்படி மாணவர்களிடம் இருந்து பாத்திரத்தைத் தேர்வு செய்தீர்கள்?

பாத்திரம் பற்றி எழுதினேன். மாணவர்களின் குண இயல்புகள் பற்றித் தெரிந்து கொண்டேன். நேரடியாக அவர்களை நேர்காணல் செய்தேன். நடிப்பை வெளிப்படுத்திக் காட்டும்படி கூறினேன். தங்களுக்கு முடிந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றையும் எண்ணத்தில் கொண்டு, அவர்களின் சம்மதத்துடன் பாத்திரங்களைத் தேர்வு செய்தேன். சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் பேராசிரியர். ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ஏனெனில் அவர் நிறைய மொழிகளில் உள்ள பிரதிகளை வாசித்துக் காட்டினார்.

இராமாயணத்துடன் தொடர்புபடுத்தி புதிய இராமாயண வடிவை தோற்றுவிப்பதாகக் கூறுகின்றீர்கள். எப்படித் தொடர்பு படுத்துகின்றீர்கள்?

தஞ்சாவூர் பஞ்சநாதீஸ்வரர் கோவிலில் பெண்கள் குழுவினர் "இராமரின் ஐந்து கற்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் அன்பு செலுத்துவதை கடவுளின் ஒரு குறியீடாக இங்கு கொண்டு வந்துள்ளேன்.

சமஸ்கிருதத்தில் "பஞ்சரத்தின க்ருதிகள்' என்பார்கள். பஞ்சரத்தின கீர்த்தனைகள் கடவுளான இராமனை வாழ்த்துவதாக உள்ளது. அன்பு செலுத்துவதும் கடவுள் தன்மை அல்லவா?. 


-தர்மினி பத்மநாதன்