Wednesday, November 24, 2010

நேற்று பெய்த மழை

சென்னை,மழைக்கு மக்கள் நடுங்கும் பூமி.மழையானாலும் சரி வெயிலானாலும் சரி,"வெயில் சற்று அதிகம்,மழை சற்று குறைவு" என்பது போய்,என்ன மழையிது இப்படி பெய்து கெடுக்கிறது என்பதே தற்சமயம் சாலையோர சிறு வியாபாரிகளின் பரவலான குரலாக உள்ளது.

காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரபரப்பாக ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வெளிவரும் மக்கள் தங்கள் கலடிகளை அவ்வளவு பத்திரமாக பார்த்துப் பார்த்துப் பதித்தனர்.

செய்வதற்கு வேலை இருக்கிறது,செல்வதற்குத்தான் வழியில்லை என்பதாய் வானிலை ஆய்வாளர் ரமணன் சொல்லியும் குடை கொண்டு வராமல் மழையக்கண்டு ஒடுங்கி நின்றது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓர் கூட்டம்.

சேர்,சகதி என்பது போய் பள்ளமெது,மேடெது எனத் தெரியாவண்ணம் மழைநீர் சாலையை சமமாய் காட்டுவதாய் பயந்தனர் வாகன ஓட்டிகள்.சாதாரன மழைக்கு சாலைகள் அறுபடுவது சாதாரனம் என்று சர்வசாதாரனமாக சொல்லிவிட்டு, முட்டிக்குமேல் துணியை தூக்கிக்கொண்டு கரைகண்ட கூவக்கிளைகளை தத்தம் வண்டிகளை கொண்டு கடக்கின்ற மக்கள் கூட்டம்.

இத்தனையும் தாண்டி,பயன்படுத்தியே ஆக வேண்டிய சுரங்கப்பாதையை பயன்படுத்தவே முடியாத நிலை,சுரங்கப்பாதை வாய்க்காலாக மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் வேறு.5 அடி அகல நடைபாதையில் 4 அடிக்கு கடைகள் மீதம் 1 அடியில் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் தடுமாற்றத்தோடு சாரையாய் செல்லும் மக்கள் என சென்னை அழகாய்த்தான் உள்ளது.

இல்லை இதெப்படி அழகாகும்? எல்லோரையும் போல் இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.மழைக்குப்பின் மண்வாசம் ஆனால் இங்கோ முன்னும் பின்னும் தார் வாசமும்,கான்க்கிரீட் வாசமும்,எந்திர மனிதனின் சுவாசமும் தான்.

மக்களுக்கு இந்த மழை பல வகைகளில் இன்னலாக இருந்தாலும்,இன்னும் வெட்டப்படாத மரங்களுக்கு இது ஆதாரமாக அமந்துள்ளதே முக்கியமானது.குடிக்ககவும்,கழுவவுமே கஷ்டப்படும் இம்மக்கள் எங்கிருந்து மரம் வளர்ப்பது, குறைந்த பட்சம் வெட்டாமலிருப்பதே அதிசயம்.எது எப்படியிருப்பினும் இங்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போல் சென்னை பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

வெயிலுக்காகவே மழையை விரும்புகின்றனர்.பனிக்காகவே வெயிலை ரசிக்கின்றனர்.இங்கு இன்னும் பல சேரிப்பகுதி கூரைகளின் சருகில் சொட்டும் மழைநீரை அவர்களையன்றி யாராலும் ரசிக்கமுடியாது.அவர்களையன்றி யாராலும் மழையில் சுதந்திரமாக நனைய முடியாது.முடிந்தால் முயன்று பாருங்கள்.....


- பாஇரா.