Sunday, December 19, 2010

சேரி - வையும் வஞ்சியம்மா:

"உங்கள மாதிரி ஆயிரம் பேர் வந்துட்டாங்க, போட்டோ புடிச்சிகினு போவாங்க ஆனா ஒன்னும் செய்ய மாட்டாங்க. புல்டோசர் எடுத்துகிட்டு கவர்மென்ட் காரங்கதான் வருவாங்க!"

பேனா பேப்பர் சகிதமாக நம்மை கண்டவுடனயே இயலாமையும் கோபமும் கலந்த குரலில் தன்னை வெளிப்படுத்துகிறார் 60 வயாதான வஞ்சியம்மா.


கருவாட்டு நெடி அடிக்கும் சில அடி அகலமே உடைய குறுகிய தெரு, தீப்பெட்டியை நெடுக வைத்தாற்போல் குடியிருப்புகள், அம்பேத்கார் பதாகையை தாங்கிய அலுவலகம், மீன் விற்கும் பெண்கள், முறைக்கும் இளைஞர்கள் என சற்று மிரட்சியை ஏற்படுத்தும் காட்சிகள் .

சிங்கார சென்னையின் புகழ்பெற்ற மெரினா கடற்கரையின் பின்புறமாக அமைந்துள்ளது இந்த சேரி .
"பூர்விகம் அப்படி இப்படினெல்லாம் ஒண்ணும் இல்லங்க!  நான் பொறந்தது  இந்தோ இங்கிருக்கிற அரசு ஆஸ்பெத்திரிலதான்.. எங்க தாத்தா அப்பால்லாம் காலா காலாமா இங்கதான் இருக்காங்களாம். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எல்லாமே மெட்ராஸ்தாங்க்க." என்று தங்கள் பூர்விகத்தை பற்றிய அறிகமுகத்தோடு பேச்சை தொடர்கிறார் புஷ்பா, 35.

"வெளியூர்ல சொந்தக்காரங்கண்ணா அதோ இருக்குதே டீக்கடை ( எதிரில் இருக்கும் தேநீர் கடையை சுட்டிக்காண்பித்தவாறு ) அதுல ஒரு வெளியூர்  பையன் வேலப்பாத்திச்சு. அப்போ அதுக்கும் எங்க ஊட்டு பொண்ணுக்கும் புடிச்சுப்போய் கல்யாணம் பண்ணிக்கிச்சுங்க.. அந்த பையன் ஊரு கும்பகோனம். எங்க ஊட்டு பொம்பளைங்க வெளியூர்னு இப்பத்தான் மொதோ மொறையா அங்க போய்ட்டு வந்தோம்".

வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் போன்ற திட்டங்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அடிப்படையான வசதிகள் ஏதும் இல்லமால் வாழும்  உங்களுக்கு இந்த அரசாங்கம் இதுக்கு மாத்தா எதுவுமே செஞ்சு தரலையா என்று கேட்டபோது,

"எங்க அவுங்க வர்றாங்க! எலெக்ஷன் டைம்ல ஓட்டு கேக்க மட்டும் வருவாங்க. கடைசியா இரண்டு வருஷமா வெள்ள நிவாரண நிதி கூட தரவேயில்ல! " என்றும்

"எங்கேயோ துரைப்பாக்கம் பக்கம் போக சொல்றாங்க. எங்களுக்கு தொழில் எல்லாம் இங்க இருக்கும்போது அங்க போய் என்ன பண்றதுங்க?!, அதனால நாங்க இங்கயே இருக்கலாம்னு இருக்கோம்" என்றும் தெரிவித்தார் மாலதி,40.

மேலும் அருகாமையிலேயே அரசு மருத்துவமனை, அரசு பள்ளி போன்றவை இருப்பதால் இவர்களுக்கு வசதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த பகுதியில் இரு பிரிவு உள்ளனர். மீனவர் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவு. ஆனால் அவர்களுக்குள்ளாக வேற்றுமையெல்லாம் பாரட்டப்படுவதில்லை என்றும், ஒற்றுமையாகவே இருப்பதாகவும் கூறினர்.

அடிப்படை உரிமைகள் பற்றிய  விழிப்புணர்வு அவர்களிடம் அறவே இல்லாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரை கூறி , அதற்குத்தான் பரம்பரை பரம்பரையாக ஒட்டுபோடுவதாகவும், இந்த முறையும் தாங்கள் அதற்குத்தான் ஓட்டுபோட போவதாகவும் தெரிவித்தனர்.

உங்களுடைய உரிமைக்காக குரல் கொடுக்க உங்களுக்கு யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டபோது, "இந்தோ அம்பேத்கார் போட்டோ போட்டு ஒரு குடிசை இருக்கே. இங்கே சாந்திரம் ஆனா நாலு பேர், வருவாங்க ஏதோ பேசுவாங்க போவாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது" என்றும் 

"இந்தோ இருக்கானே இவன்தான் இப்பொ நாலாவது படிக்கிறான். நாங்களும் படிக்கலை, எங்கல பெத்தவங்கலும் படிக்கல. அதனால புள்ளைங்க படிச்சாதான் உண்டு" என்று நம்பிக்கையோடு தன் மகனின் தலையை வருடிகிறார் லதா,26.

இன்னும் வஞ்சியம்மா முறைத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தார்.