Sunday, December 19, 2010

சேரிகளின் தேசம்

குடும்பத்திற்கு வயது 40

படத்தில் காணும் இந்தக் குடும்பத்தின் வீடும் சரி, அவர்களின் வாழ்வாதாரமும் சரி இந்த மூன்றுச் சக்கர வாகனம் தான். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த குடும்பத்தில் உள்ள மூவரின் ஒட்டு மொத்த வயதைக் கூட்டினால் கூட 40 வயது தான் இருக்கும். இவர்கள் தான் சென்னையின் பூர்வ குடிமக்கள். இன்று இத்தகைய நகரும் இல்லங்களில் ஒரு நிலையில்லா வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

20 வருடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் எங்கள் வீட்டில் இப்போது இருக்கின்ற நவநாகரீக கழிவறை எல்லாம் இருந்ததில்லை. மட்டை வேலி அடைப்புக்குள் தான் நமது இயற்க்கை உபாதைகளை கழித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய மட்டை வேலி அடைப்புகள் இன்றும் பரவலாக பார்க்கவும் முடிகின்றது. எங்கள் வீட்டில் தினமும் ராக்கி என்ற அம்மையார் அதிகாலையே வந்து அந்த மட்டை அடைப்பை சுத்தம் செய்து விட்டுப் போவார்.

பின்னர் எங்கள் வீட்டில் நவீன கழிப்பறையை கட்டிய பின்னர் ராக்கி அம்மையார் வருவதும் நின்று விட்டது. தற்போது ராமேஸ்வரம் அருந்ததியினர் காலணியில் வசித்தும் வருகின்றார். இக்காலணி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தள்ளி ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள சேரிப் பகுதி. ஒரு காலத்தில் காடு போன்று காட்சி தந்த இந்தப் பகுதி தற்போது ரியல் எஸ்டேட் என்ற தொழில் ராமேஸ்வரத்தில் அறிமுகமாகிய பின்னர் கட்டிடங்களும், சாலைகளும் இந்த காலணிக்குள்ளும் எட்டிப் பார்க்கின்றது.

மும்பை மாநகரத்தில் மிகப் பிரபலமான சேரிப் பகுதி என்றால் அது தராவி சேரி. அதில் மக்கள் சாதி அடிப்படையில் ஒரேப் பகுதியில் வசிக்காமல் ஏழைகள் என்ற அடிப்படையில் அநேகமாக வசிக்கின்றனர். மேலும் இதில் தமிழர்கள் அதிகம். பார்க்க ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம்.

சமீபத்தில் செய்தி சேகரிக்க சாலிகிராமத்தை ஒட்டிய கூவம் நதிக்கரையில் உள்ள மஜித் நகருக்கு சென்றேன். இதில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து மதத்தினரும் கலந்தே வசிக்கின்றனர். 

சமீபத்தில் மஜித் நகர் வாழியாக செல்லும் கூவம் நதியை ஆழப்படுத்துவதாக இருந்த 37 வீடுகள் இடிக்கப்பட்டன. எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி வீடுகள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடும் வழங்காமல், பாதிக்கப்பட்டோருக்கு மாற்றிடம் வழங்காததால் அம்மக்கள் தெருவிற்கு வந்ததாக தெரிவித்தனர். பின்னர் ஒரு சமூக அமைப்பின் முயற்ச்சியால் ஒரு வாரம் கழித்து இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 37 லட்சம் ரூபாய் நிவாரணமும் கிடைத்தது.  இவ்வாறாக சாதிய ரீதியில் உருவான சேரிகளின் மாநகரங்களில் பற்பல காரணங்களினால் ஏழைப் பணக்காரன் என்றடிப்படையில் மாநகரங்களில் மறுஉருமாறுகின்றன.