சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 10 ஆற்றல்சார் பள்ளிகளின் தொடக்க விழா, திருவான்மியூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பள்ளிகளுக்கான நெறிமுறைகள் கையேட்டினை மேயர் வெளியிட, கல்வித்துறை துணை ஆணையர் எம்.பாலாஜி பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, 10 ஆற்றல்சார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கையேட்டினை பெற்றுக் கொண்டனர்.
![]() |
சென்னையில் 10 ஆற்றல்சார் பள்ளிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்து, நெறிமுறைகள் குறித்த கையேட்டை மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார் |
நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:சென்னை மாநகராட்சி சார்பில் முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 10 ஆற்றல்சார் பள்ளிகள் தொடங்கப்படுகிறது. இதை மூன்று ஆண்டுகளுக்குள் தரம் உயர்த்தப்பட்ட மாதிரிப் பள்ளிகளாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு ரூ. 40 லட்சம் செலவில், சீரான வர்ணம் தீட்டும்பணி நடைபெற்று வருகிறது.ஆற்றல்சார் பள்ளிகளில் அமையும் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்றவை போதுமான அளவில் அமையும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இந்திய தரக் கவுன்சில் சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆற்றல்சார் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பெறும் வகையில் எஃப்.ஐ.டி.ஜே.இ.இ. நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ரூ. 2.54 கோடி மதிப்பிலான இந்தப் பயிற்சியை, இலவசமாக வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.கணித ஆய்வகங்களும் இந்த ஆற்றல்சார் பள்ளிகளில் ரூ. 4 லட்சம் செலவில் விரிவுப்படுத்தப்படுகிறது. ஆற்றல்சார் பள்ளிகளில் மாணவர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்கவும், படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தவும் நூலகங்கள் அமைக்கப்படுகின்றன.சென்னையில் வரும் நவம்பர் 29-ம் தேதி, 28 மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்கள் திறந்து வைக்கப்படும். அதேபோல 68 பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக சைக்கிள் ஸ்டாண்டுகள் டிசம்பர் 2-ம் தேதி திறந்து வைக்கப்படும். ஆற்றல்சார் பள்ளிகள் அனைத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு மையம் அமைக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது என்றார்.